சுவிட்ஸர்லாந்தின் அமைப்பின் சார்பில் வனச்சரகர் சதீஷுக்கு “சர்வதேச வனசரகர்” விருது

சுவிட்ஸர்லாந்தின் அமைப்பின் சார்பில் வனச்சரகர் சதீஷுக்கு “சர்வதேச வனசரகர்” விருது

 ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா தேசிய பூங்கா பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும் செய்த பணிகளுக்காக, ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷுக்கு 'சேவ் தி ஸ்பீசீஸ்' என்ற பன்னாட்டு விருது கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம், சர்வதேச வனச்சரகர் கூட்டமைப்பு, உலக வன உயிரின பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த விருதினை வழங்குகின்றன.

உலகில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றிய 10 வனச்சரக அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வதேச வனச்சரகர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக 100 நாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வனச்சரகர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த விருதுக்கு சதீஷ் பெயரினை டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவன விஞ்ஞானி சிவக்குமார் பரிந்துரைத்தார்.

ஏப்ரல் 7ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க இருந்த விருது வழங்கும் விழா கொரோனா தொற்று பரவல் காரணமாக புதன்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. இதில் சதீஷுக்கு 'சேவ் தி ஸ்பீசீஸ்' என்ற பிரிவின் கீழ் விருது கிடைத்தது. அவருக்கு சீருடையில் அணிந்து கொள்ள ஒரு பேட்ஜும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் 2014ம் ஆண்டு தமிழக வனத்துறையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராக பணியில் சேர்ந்தார். பின் தெலுங்கானா வனச்சரக அலுவலர் பயிற்சி மையத்தில் 18 மாத பயிற்சிக்கு பின் 2016 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா உள்ள மண்டபம் வனச்சரகத்தில் சரகராக பணியில் சேர்ந்தார்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்து இலங்கை ஊடாக வளைகுடா நாடுகளுக்கு கடத்திய 70 வழக்குகளில் இவர் சுமார் 100க்கும் அதிகமான குற்றவாளிகளை பிடித்து தண்டனை பெற்று தந்துள்ளார். அதன் பின்னர் 2019 ஆண்டு ராமநாதபுரம் வனச்சரக அலுவலராக பணியில் சேர்ந்து பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க சுமார் 40க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டில் கடற்கரை ஓரத்தில் 100 ஏக்கர் பரப்பில் மீன் எலும்பு வடிவ அமைப்பில் அலையாத்தி காடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வனச்சரகர் சதீஷ் தமக்கு இந்த விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் மக்களுக்கு புலிகள் காப்பகம், பறவைகள் சரணாலயங்கள் மீதான விழிப்புணர்வு அதிகம் உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் ஒரு உலகம் இருப்பதும், அதில் லட்சக்கணக்காண உயிரினங்கள் வாழ்ந்து வருவதும், அதனால், உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட சீரழிவுகள் தடுக்கப்படுவதும் பெரிதாகத் தெரியவில்லை. கடல் வளம் எப்படி உதவுகிறது என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்கு, வனத்துறைக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது என்று தெரிவித்தார் அவர்.

இந்த விருதை இந்தியாவில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலர்களுக்கும், தமிழக வனத்துறைக்கும் சமர்ப்பிப்பதாக சதீஷ் மேலும் தெரிவித்தார்.

தமிழக வனத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வன அலுவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு இந்த விருது தூண்டுகோலாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் வனத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள் முன் வர வேண்டும். கடல் வளத்தின் மீதும் அலையாத்தி காடுகள் மீதும் அதிக அக்கறை கொண்டு பிரதி பலன் எதிர்பாராமல் பணியாற்ற வேண்டும். நிச்சயம் ஒரு நாள் நமது பணிக்கு சர்வதேச அளவில் அங்கிகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்த விருது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.

கொலம்பியா, ரஷ்யா, ஜாம்பியா, மியான்மர், கம்போடியா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 8 வனச்சரக அலுவலர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர். உத்தரகாண்டில் உள்ள ராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனச்சரகர் மகேந்திர கிரிக்கும் இந்த விருது கிடைத்துள்ளது. எனவே இந்தியாவில் இரு வனச்சரகர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுவிட்ஸர்லாந்தின் அமைப்பின் சார்பில் வனச்சரகர் சதீஷுக்கு “சர்வதேச வனசரகர்” விருது

No comments:

Post a Comment

FIND YOUR TOPICS